கடந்த 3 நாட்களில் 3.16 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.94.80 கோடி பொங்கல் பரிசு தொகை விநியோகம்

திருவாரூர், ஜன. 12: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மூலம் கடந்த 2022ம் ஆண்டில் பொங்கல் தொகுப்பாக வெல்லம், பச்சரிசி, தலா ஒரு கிலோ வீதம் ரவை, கோதுமை மாவு மற்றும் ஏலம், முந்திரி, திராட்சை மற்றும் மளிகை பொருட்கள், முழு நீள செங்கரும்பு என மொத்தம் 20 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

பின்னர் 2023 மற்றும் 2024ம் ஆண்டில் அரிசி சர்க்கரை மற்றும் செங்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.ஆயிரம் ரொக்கம் சேர்த்து பொங்கல் தொகுப்பானது வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் மட்டும் நிறுத்தப்பட்டு வழக்கம் போல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு நீள செங்கரும்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் பொதுமக்களின் கோரிக்கையின் பேரிலும், பொங்கல் பண்டிகையினை சீரும் சிறப்புமாக வெகு விமர்சையுடன் கொண்டாடும் வகையிலும் ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பினை வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை கடந்த 8ந்தேதி சென்னையில் அவர் துவங்கி வைத்தார். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரூ.3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டன.

இதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த பணியினை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்.பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர். இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஆனந்த் நேற்று திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் நேரில் பார்வையிட்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 596 முழு நேர நியாய விலை கடைகள் மற்றும் 204 பகுதி நேர நியாய விலை கடைகள் என மொத்தம் 800 நியாய விலை கடைகள் மூலம் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 10ந்தேதி வரையில் 3 நாட்களில் 3 லட்சத்து 16 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வீதம் ரொக்கமாக ரூ.94 கோடியே 80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இது மொத்த குடும்ப அட்டைதாரர்களில் 80 சதவிகிதம் ஆகும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் குறிப்பிட்ட நாள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று சிறப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இதுதொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் புகார்களை 1967 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது கலெக்டர் மோகனசந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: