பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் ரூ.700க்கு விற்பனை: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழைத்தார் விலை ரூ.200 வரை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மக்காச்சோளம், உளுந்து, எள், நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் வாழை மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வடுகக்குடி, வளப்பக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, நடுக்கடை, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வழைத்தார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் தினமும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை இலைகளும் அறுவடை செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் வாழை நார்களும் தயார் செய்யப்பட்டு பூ, மாலைகள் கட்டுவதற்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தற்போது வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழைத்தார் விளைச்சல் குறைந்துள்ளது. காரணம் வடகிழக்கு பருவமழை காரணமாக வாழைத்தார் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் திருவைாறு வாழை சந்தைக்கு தொட்டியம், லால்குடி, அன்பில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்தும் வாழைத்தார் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக திருவையாறில் இருந்து தான் வாழைத்தார் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தற்போது இங்கும் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு வருகிறது.

தற்போது வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழைத்தார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழைத்தார் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.200 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வாழை விவசாயிகள் கூறுகையில்: பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அறுவடை குறைந்துள்ளது. இருப்பினும் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.200 வரை விலை அதிகரித்து காணப்படுகின்றன. இதே போல் ரூ.700 முதல் ரூ.800-க்கு விற்பனை செய்த செவ்வாழைத்தார் ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டது. செவ்வாழைத்தார் ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரை விலை அதிகரித்துள்ளது. மேலும் திருவையாறு மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன.

அந்த வகை வாழைத்தார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: