×

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிய மயில் வாகனம்

 

ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிய மயில் வாகனம் வழங்கப்பட்டது. ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த திருதிவ் என்ற பெண் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மயில் வாகனத்தை கோயிலுக்கு வழங்கினார்.

இந்த வாகனம் முருகப்பெருமானுக்கு உகந்த வேங்கை மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ஸ்தபதி, சுமார் 400 கிலோ எடையில் கடந்த மூன்று மாதங்களாக இதனைச் செய்து முடித்து நேற்று மாலையில் திருக்கோயிலுக்கு ஒப்படைத்தார். தொடர்ந்து, புதிய மயில் வாகனத்திற்கு கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜையில் திருக்கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர் விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். பின்னர், மேளதாளங்கள் முழங்க வல்லக்கோட்டை கிராமத்தில் கரிக்கோல ஊர்வலமாக மயில் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் உற்சவங்களில் இந்த மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதிஉலா நடைபெறும், என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vallakottai Murugan Temple ,Subramaniam Swamy temple ,Vallakottai ,Oragadam ,Trithiv ,Kerala ,US ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...