சென்னை, ஜன.10: சென்னை சூளைமேடு விநாயகபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (50), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சீனிவாசனுக்கு மனைவி அமுதா (45) மற்றும் 2 மகன்கள். மூத்த மகன் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இளைய மகன் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அப்பகுதியில் சீனிவாசன் நடத்தும் டீக்கடை பிரபலம் என்று கூறப்படுகிறது. இதனால் எப்போதும் அந்த கடையில் கூட்டம் இருக்கும். எனவே கணவருக்கு உதவி செய்யும் வகையில் அடிக்கடி அமுதா டீக்கடைக்கு சென்று சிறிது நேரம் கடையை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மதிய உணவுக்காக சீனிவாசன் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் கடையில் அமுதா இருந்துள்ளார். பிறகு கணவன் மதிய உணவை முடித்துவிட்டு கடைக்கு வந்ததும், அவரது மனைவியை வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அதன்படி வீட்டிற்கு அமுதா வந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த அமுதா அலறும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது அமுதா கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் தீயில் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது அமுதா வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் ரத்தக்கறையுடன் வெளியேறி ஓடி உள்ளார். இதை பார்த்து ஓடிவந்த மக்கள், நீ யார் அவங்க மகனா என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆமாம் என்று கூறியபடி… அமுதா வீட்டின் 2வது மாடியில் இருந்து அந்த வாலிபர் குதித்துவிட்டார். இதில் அவருக்கு கால் எலும்பு முறிந்து வலியால் துடித்தார்.
சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சூளைமேடு போலீசார் அங்கு வந்தனர். அதேநேரம் மாடியில் இருந்து குதித்த வாலிபர் எலும்பு முறிவுடன் இருந்தார். அவரது தலையில் தீக்காயமும் இருந்தது. இதை பார்த்த போலீசாரில் ஒருவர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், எரிந்த நிலையில் இறந்து கிடந்த அமுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் அமுதா வீட்டில் இருந்து குதித்த வாலிபர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் கூறினர். இதை கேட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, ‘தெருவில் நடந்து செல்லும்போது பெண் அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்தேன் சார்….. அந்த நேரத்தில் பொதுமக்கள் என்னை கொலைகாரன் என்று கூறி பிடிக்க முயன்றதால், அதிர்ச்சியில் நான் கீழே விழுந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. உடனே வாலிபரின் சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டை சோதனை செய்தனர். அப்போது, அமுதா அணிந்து இருந்த கம்மல் மற்றும் செயின் ரத்தக்கறைகளுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்திய போது நகைக்காக அமுதாவை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (28). இவர் கொலை செய்த அமுதாவின் கணவர் சீனிவாசன் நடத்தும் டீக்கடை அருகே ஜூஸ் கடை வைத்துள்ளார். கடை நடத்த பணம் தேவைப்பட்டதால் பக்கத்தில் உள்ள கடையில் அடிக்கடி சென்று செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். அதன்படி, அருகில் உள்ள ஒரு கடையில் கடனாக பணம் கேட்டுள்ளார். அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் அமுதா கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் எப்போதும் கழுத்தில் செயின் அணிந்து செல்வதை சாந்தகுமார் நோட்டமிட்டுள்ளார். அமுதா ஒவ்வொரு நாளும் கடைக்கு வரும் போது விதவிதமான கம்மல் அணிந்து வருவதையும் சாந்தகுமார் கவனித்துள்ளார். இதனால் அவரிடம் நகைகள் அதிகமாக இருக்கும் என்று முடிவு ெசய்துள்ளார்.
எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் அன்று அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் அரை லிட்டர் ெபட்ரோல் வாங்கிக் கொண்டு, கையில் சிறிய கத்தியுடன் அமுதா வீட்டிற்கு அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அமுதா வீட்டை திறந்து உள்ளே ெசன்று வீட்டு வேலையை பார்த்துள்ளார். அப்போது சாந்தகுமார் உள்ளே நுழைந்து எப்படி இருக்கீங்க அக்கா….. என்று கூறியபடி கையில் வைத்திருந்த கேக் பாக்சை கொடுத்துள்ளார். திடீரென அமுதா கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்துள்ள கம்மல், 10 சவரன் செயினை பறித்துள்ளார். அப்போது அமுதா…. காப்பாத்துங்கள்….. என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தகுமார் பொதுமக்கள் தன்னை பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் அமுதா கீழே விழுந்துள்ளார். பிறகு சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்தார்.
உடனே சாந்தகுமார் கொலை செய்ததை மறைக்கும் வகையில், கையில் ஏற்கனவே கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து அமுதா மீது ஊற்றி எரித்துவிட்டால் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும், தற்கொலை என்று அனைவரும் நம்பிவிடுவார்கள் என முடிவு செய்து பெட்ரோலை அமுதா உடல் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். அப்போது அவரது தலையிலும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கை விரலில் ரத்த வழிவதை பார்த்து பொதுமக்கள் என்னை பிடிக்க முயன்ற போது அவர்களிடம் இருந்து தப்பிக்க 2வது மாடியில் இருந்து குதித்துவிட்டேன். நான் நகைகளை மட்டும் பறித்து செல்லலாம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் அமுதா சத்தம் போட்டதால் வேறு வழியின்றி கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என சாந்தகுமார் வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசார் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாந்தகுமார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தகுமாரை கைது செய்தனர்.
