ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்

ஆக்லாந்து: ஏஎஸ்பி கிளாசிக் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், போலந்து வீராங்கனை மேக்தா லினெட்டிடம் 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டி ஒன்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிரசேவாவை எதிர்கொண்டார். துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா மேனிகோ ஈலா, குரோஷியாவின் டோனா வெஹிக் உடன் மோதினார்.

போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக ஆடிய வெஹிக், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார். அதன்பின் ஆக்ரோஷமாக ஆடிய ஈலா, அடுத்த இரு செட்களையும், 6-4, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் போலந்து வீராங்கனை மேக்தா லினெட் (33), அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (45) உடன் மோதினார்.

முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் லினெட்டும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வீனசும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய லினெட், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். வீனஸ் வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: