தானே: பாஜவுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பர்நாத் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர், முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சி தேர்தலில் பாஜ 14 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், சிவசேனா 27 இடங்களிலும் வென்றது. தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றின. இங்கு தலைவர் பதவியை பெற 30 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.
எனவே பாஜ தனது அரசியல் எதிரியான காங்கிரசுடன் கைகோர்த்து பதவியை கைப்பற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், கொள்கை ரீதியான தங்களது எதிரியாக கருதப்படும் பாஜவுடன் கைகோர்த்ததால் கோபமடைந்த காங்கிரஸ் தலைமை, அம்பர்நாத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கவுன்சிலர்களையும் ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் 12 பேரும் முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர்.
