புதுடெல்லி: தெரு நாய்கள் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 7ம் தேதி முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தது. அப்போது, ‘காலையில் எந்த நாய் என்ன மனநிலையில் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது; அது எப்போது கடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது; நாயின் மனதை யாராலும் படிக்க முடியாது என்பதால் வருமுன் காப்பதே சிறந்தது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் பலர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்குக் கன்னட நடிகையும் முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.
அவர் தனது பதிவில், ‘ஒரு ஆணின் மனதையும் யாராலும் படிக்க முடியாது; அவர் எப்போது பலாத்காரம் செய்வார் அல்லது கொலை செய்வார் என்பது யாருக்கும் தெரியாது; அதற்காக அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாய்களை அப்புறப்படுத்துவதற்கு ‘கணிக்க முடியாத தன்மை’ காரணமாகச் சொல்லப்படுமானால், அதே தர்க்கம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று அவர் வாதிட்டுள்ளார். நடிகையின் இந்த ஒப்பிடுதலுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பலர் நடிகையின் கருத்து ஏற்புடையது அல்ல என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
