திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக கடந்த 9 நாட்களில் 7.9 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி கடந்த டிசம்பர் 30ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இன்று வரை மொத்தம் 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முதல் 3 நாட்கள் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று வரை இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்களும், ரூ.300 டிக்கெட் பெற்றவர்களும் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தனர். இன்றிரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் சொர்க்கவாசல் கதவை மூடுவார்கள்.
நேர ஒதுக்கீடுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் இன்று மதியம் 12 மணி முதல் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள னிவாசம், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய பக்தர்கள் ஓய்வறை வளாகத்தில் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் நாளை முதல் ஆன்லைனில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பணம் செலுத்தினால் டிக்கெட் வழங்கி அதே நாளில் பிற்பகல் 4 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம்தேதி முதல் நேற்று வரை (9 நாட்கள்) 7 லட்சத்து 9 ஆயிரத்து 831 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2 லட்சத்து 613 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.36.86 கோடி காணிக்கை செலுத்தினர். சொர்க்கவாசல் தரிசன நிறைவு நாளான இன்று காலை சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். கோயில் உண்டியலில் ரூ.4.69 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.
