- டெஜா
- கட்சி
- பீகார், பா. ஜா
- நிதின் நபின்
- பாட்னா
- ராஷ்டிரிய லோக்
- மோர்சா
- தேசிய ஜனநாயக கூட்டண
- பீகார்
- தேசிய அதிரடி தலைவர்
பாட்னா: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா இரண்டாக உடையும் நிலை உருவாகி உள்ளது. அந்த கட்சியின் 3 எம்எல்ஏக்கள் பா.ஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார்கள். பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்) கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் எம்எல்ஏவாக இல்லாத தனது சொந்த மகனுக்கு உபேந்திர குஷ்வாஹா அமைச்சர் பதவி வழங்கினார். இதனால் அதிருப்தியடைந்த ஜித்தேந்திர மஹத்தோ தலைமையிலான 3 எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
குஷ்வாஹா ஏற்பாடு செய்திருந்த முக்கியமான விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணித்த இந்த 3 பேரும், பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ ஜித்தேந்திர மஹத்தோ இதுகுறித்து கூறுகையில், ‘கட்சித் தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு வாரிசு அரசியலை முன்னெடுப்பது ஏற்கத்தக்கதல்ல. முதல்வர் நிதிஷ் குமாரே எனது உண்மையான வழிகாட்டி’ என்று தெரிவித்துள்ளார். இவர்கள் விரைவில் ஐக்கிய ஜனதா தளம் அல்லது பாஜவுடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குஷ்வாஹாவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
