புதுடெல்லி: அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் ரயில்வே துறையின் பெயரில் மோசடி செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது.
தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்ட ஆழமான விசாரணையில் வனத்துறை, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், இந்திய அஞ்சல்துறை, வருமான வரித்துறை, சில உயர்நீதிமன்றங்கள், பொதுப்பணித்துறை, பீகார் அரசு, டெல்லி மேம்பாட்டு ஆணையம், ராஜஸ்தான் தலைமைச்செயலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளின் பெயரில் பணமோசடி செய்யப்பட்டள்ளது தெரியவந்தது.
இந்த கும்பல் அதிகாரப்பூர்வ அரசு துறைகளை போல ஆள்மாறாட்டம் செய்து போலி மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்தி மோசடியான பணி நியமனக் கடிதங்களை அனுப்பியுள்ளது. விண்ணப்பதாரர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அந்த கும்பல் ரயில்வே பாதுகாப்பு படை, பயணச்சீட்டு பரிசோதகர், தொழில்நுட்ப வல்லுநர் போன்ற நிறுவனங்களில் மோசடியாக பணியமர்த்தப்பட்ட சில பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு் அல்லது மூன்று மாதங்களுக்கு சம்பளத்தை வழங்கியுள்ளதும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பீகார், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, கேரளாவில் எர்ணாகுளம், பந்தளம், அடூர், கோடூர், தமிழ்நாட்டில் சென்னை, குஜராத்தில் ராஜ்கோர், உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பிரயாக்ராஜ் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
