கொல்கத்தா: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்திருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னின் பூர்வீக வீடு மேற்கு வங்க மாநிலம் போல்பூரின் சாந்திநிகேதனில் உள்ளது. அவருக்கு 92 வயதாகும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வரும் 16ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் அமர்த்தியா சென்னின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேராசிரியர் அமர்த்தியா சென் சமர்ப்பித்த எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தில் சில தகவல்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவருக்கு ஒரே ஒரு நோட்டீஸ் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு 85 வயதுக்கு மேல் இருப்பதால் தேர்தல் ஆணைய விதிகளின்படி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரி, அமர்த்தியா சென் வீட்டிற்கு நேரில் சென்று விசாரிப்பார்’’ என்றார்.
கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்யப்பட்ட தகவலின்படி, அமர்த்தியா சென்னுக்கும் அவரது தாயாருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்புவது மேற்கு வங்க மக்களை அவமதிப்பதற்கு சமம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளத்தில், ‘‘நோபல் பரிசு பெற்றவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் என்ன செய்வது? அதற்காக அவர் ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் விசாரணை நோட்டீசை பெறுவார். எஸ்ஐஆர் என்பது பாஜ, தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலின் பேரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாத, வெட்கக்கேடான நாடகம்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பாஜ, தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளன.
