புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்ற தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்சநீதிமன்றம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அகர்வால் கூறியதில்,‘‘ நாய்கள் மட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் அனைத்து வகையான விலங்குகளையும் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது.
தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு என்பது செய்யப்படுவது தான் முதன்மையான விஷயம் ஆகும். அதற்குப் பிறகு நாய்களை பாதுகாப்பாக அடைத்து வைக்க மாநில அரசுகள் உரிய இடங்களை ஒதுக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்க்கடி காரணமாக இரண்டு நீதிபதிகள் சாலை விபத்துகளை சந்தித்துள்ளனர் அதில் ஒருவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பு என்பது ஏற்பட்டு இருக்கிறது நல்லவேளையாக இந்த நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய யாரும் இதுவரை தெரு நாய்க்கடிக்கு ஆளாகவில்லை என்று கடும் வேதனை தெரிவித்தனர்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், இரண்டு கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நாளுக்கு நாள் தெருக்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. பல இடங்களில் நாய்களை அப்புறப்படுத்த குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தெருநாய்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த குடியிருப்புவாசிகள் கவலைப்படுவதில்லை. வரக்கூடிய நாட்களில் பால் தருகிறது என்பதற்காக எருமை மாட்டை கூட பூங்காக்களுக்கு அழைத்து வரலாம். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சொன்னால் எதிர்ப்பும் பதிவு செய்யலாம் என காட்டமான வாதங்களை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதில்,\\” தெரு நாய்க்கடி விவகாரத்தில் கடந்த உத்தரவில் மருத்துவமனைகள் பள்ளி மற்றும் பொது இடங்களில் உள்ள தெரு நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நாங்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தோம். ஏனென்றால் இந்த இடங்கள் தெரு நாய்கள் வருவதற்கான இடங்கள் கிடையாது. எனவே இன்னும் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
* தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு
நீதிபதிகள் கூறுகையில், வனவிலங்குகள் ரயில்வே வழித்தடங்களை கடக்கும் போது ஏற்படும் விபத்துக்கள் நடப்பது தொடர்கிறது. ஆனால் இன்ஃப்ராரெட் கேமரா மற்றும் ஜியோ டேக்கிங் முறையின் மூலம் தமிழ்நாடு அரசு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து கோவை மதுக்கரையில் ரயில்வே வழித்தடங்களில் விபத்து நடப்பதை தடுப்பதில் வெற்றி அடைந்துள்ளது என்று தெரிவித்தனர்.
* ஏன் சிங்கம், புலி, கோழியை வீட்டில் வளர்க்கக்கூடாது: நாய்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் நீதிபதிகள் கேள்வி
நாய்கள் பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,‘‘ காப்பகங்களில் நாய்களை அடைத்து வைத்தால் அது இனப்பெருக்கத்தின் கூடாரமாக மாறும். தெரு நாய்களை கையாளும் விவகாரத்தில் அனைத்து தரப்புக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏன் சிங்கம் புலி கோழி ஆகியவற்றை செல்லப்பிராணியாக நீங்கள் ஏன் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நாய் ஆதரவாளர் தரப்பு வழக்கறிஞர், கோழி பிரச்னையில்லை. சிங்கம் புலி வளர்ப்பது என்பது ஆபத்தானது என்று கூறினார்.
