சென்னை, ஜன.8: பூந்தமல்லி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் நேற்று பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே ஒருவரை பிடித்து சோதனை செய்த போது 7 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சன் (30) என்பது தெரிய வந்தது. இவர் வெளி மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
