துவரங்குறிச்சி, ஜன. 7: துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஆடு மேய்ப்பவர் பலியானார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (70). இவர் நேற்று பிற்பகல் பாலக்குறிச்சி- பொன்னமராவதி செல்லும் மாநில சாலையில் கிழக்குக்காடு பிரிவு சாலை அருகே ஓரமாக நின்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கலிங்கப்பட்டியில் இருந்து பிரேம்குமார் என்பவர் அவரது சரக்கு மினி லாரியை ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஆண்டியப்பன் மீது மோதியது.இதில் ஆண்டியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஆண்டியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
