சென்னை, ஜன.7: செங்குன்றத்தில் பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் வீட்டின் பெட்டியில் வைத்திருந்த 100 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, ரூ.4 லட்சம் ரொக்கம் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் ஜி.என்.டி சாலை பஜாரில் வசிப்பவர் குஷில்குமார். திருவள்ளூர் மாவட்ட பாஜ வழக்கறிஞர் அணி தலைவராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது, மனைவி மற்றும் 2 மகன்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளனர். பாஜ வழக்கறிஞரான குஷில்குமார், நேற்று தனது வீட்டில் உள்ள பெட்டியில் வைத்திருந்த 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை காணாமல் போனதாகவும், அதனை மீட்டுதரக்கோரி, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்குன்றம் போலீசார், இரண்டு அடுக்கு மாடி வீட்டில் வசித்து வரும் குஷில்குமாரின் வீட்டில் பூட்டு உடைக்கப்படாமல், பெட்டியில் வைத்திருந்த நகை காணாமல் போனது தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வீட்டின் பூட்டு உடைக்காமல், பெட்டியில் சாவியை போட்டு, 100 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
