* யு-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தீபேஷ்
புதுடெல்லி: 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் இளையோர் உலகக் கோப்பை போட்டியில் ஆடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் (17) சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய தீபேஷ், அற்புதமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதையடுத்து, தற்போது, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் ஆர்.எஸ்.அம்பரீசுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்திய அணிக்காக ஆடிய பாக். கபடி வீரருக்கு தடை
பஹ்ரைன்: பஹ்ரைனில் சமீபத்தில் நடந்த ஒரு கபடி போட்டியில் இந்திய அணிக்காக, பாகிஸ்தானை சேர்ந்த கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத் ஆடியிருந்தார். இந்திய ஜெர்சியை அணிந்து கபடி ஆடியதற்காக, உபைதுல்லாவுக்கு காலவரையின்றி தடை விதிப்பதாக பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு கபடி ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ஆஸி ஹால் ஆப் ஃபேமில் ஜாம்பவான் பிரெட் லீ
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் துறையில் மகத்தான சாதனைகள் புரிந்த ஜாம்பவான் வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலியன் கிரிக்கெட் ஹால் ஆப் ஃபேம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ சேர்க்கப்பட்டு கவுரவிக்கப்படுவதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது. இதில் சேர்க்கப்படும் 62வது வீரர் பிரெட் லீ. ஆஸி அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள லீ, 310 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள ஆஸி வீரர்களில் 8வது இடத்தில் லீ உள்ளார்.
