தோஹா: ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவு போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, சீன கிராண்ட் மாஸ்டர் ஜு ஜினெர், 8 சுற்றுகள் முடிவில் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, 7வது சுற்றில், ஈரான் வீராங்கனை சாரா காதெமை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.
8வது சுற்றில், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் கோர்யாச்கினா அலெக்சாண்ட்ராவுடன், கொனேரு மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்ததால், கொனேரு 6.5 புள்ளிகள் பெற்றார். மற்றொரு போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் ஜு ஜினெர், இந்தியாவை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தி, 6.5 புள்ளிகள் பெற்றார். அதனால், 8 சுற்றுகள் முடிவில், கொனேரு ஹம்பியும், ஜு ஜினெரும் 6.5 புள்ளிகளுடன் கூட்டாக முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு பின்னால், இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா உட்பட 10 வீராங்கனைகள் 6 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
ஆடவர் பிரிவில் நடந்த 7வது சுற்றுப் போட்டி ஒன்றில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிஸ்லேவ் ஆர்டெமிவிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும், 8வது சுற்றில், ஆர்மீனிய கிராண்ட் மாஸ்டர் ஷான்ட் சார்க்ஸ்யானை, கார்ல்சன் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் ரே ராப்சனை வென்றார்.
தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், 8வது சுற்றில் ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் டேவிட் ஆன்டனை வீழ்த்தினார். பின்னர், 9வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவிடம் குகேஷ் முதல் முறையாக தோல்வி அடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, ரஷ்யாவின் ஆர்டெமீவிடம் தோல்வியை தழுவினார்.
9 சுற்றுகள் முடிவில், இந்திய வீரர்கள் குகேஷ், எரிகைசி 6.5 புள்ளிகள் பெற்றுள்ளனர். ரஷ்ய வீரர் ஆர்டெமீவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான் ஆகிய இருவரும் தலா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். மேக்னஸ் கார்ல்சன், நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் உள்ளிட்ட 4 வீரர்கள் 7 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர்.
