23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல், டிச.30: நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், 23 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 572 மனுக்களை, பொதுமக்கள் அளித்தனர். அம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் ரூ.90,500 மதிப்பில் 22 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் துர்காமூர்த்தி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: