பா.ஜ.வின் குரலாக பேசி வருவதை ஏற்க முடியாது; பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் மேலிடத்தில் புகார்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: பாஜவின் குரலாக பேசி வரும் பிரவீன் சக்ரவர்த்தி மீது டெல்லி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி:
பிரவீன் சக்ரவர்த்தி பேசுவது காங்கிரசின் குரல் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நான் பேசுவதும், எங்களது பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தி இவர்கள் எல்லாம் தான் எங்களுக்கு தலைவர்கள். கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்குவதற்கு பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபட்டு வருகிறார். எங்கள் கட்சியில் இருந்தாலும் சரி, வேற கட்சியில் இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் பாஜவை காலூன்ற நேரடியாக, மறைமுகமாக முயற்சி செய்து வருகிறார்கள். உளவு வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது.

உத்தரபிரதேசத்தை தாங்கி பிடிப்பவர்கள் பாஜவை தாங்கி பிடிக்கிறார்கள். பிரவீன் சக்ரவர்த்தியின் குரல் ஆர்எஸ்எஸ் குரலாக இருக்கிறது. காங்கிரஸ் குரல் கிடையாது. இதனை எப்படி அனுமதிக்க முடியும். காங்கிரஸ்காரர்கள் எப்போதும் பாஜவை தூக்கி பிடிக்க மாட்டார்கள். உத்தரபிரதேசத்தில் மிருகங்களின் ஆட்சி நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் அளித்துள்ளோம். ராகுல் காந்தி பெயரை பயன்படுத்தி காங்கிரசுக்கு களங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க முடியாது. அண்ணாமலை போன்றோரின் கனவுகளுக்கு எங்கள் கட்சியில் உள்ள சில தற்குறிகள் இரையாகுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வலுக்கும் கண்டனம்
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாவது: தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடுகள், சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது. மனித வள மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட பல கூறுகளில் உத்தரபிரதேசம் பின்தங்கி உள்ளது. அந்த மாநிலத்தை எப்படி தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியும்?. கடன் குறித்துப் பேசும்போது அதன் பயன் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம். ஒன்றிய அரசின் நிதிக் கொள்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வரி வருவாயில் மிகப் பெரிய பங்களிப்பு செய்யும் தமிழ்நாடு, நிதி பங்கீட்டில் அதற்கேற்ற அளவு பெறுவதில்லை. அதே நேரத்தில் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகளவிலான நிதி பங்கீட்டை பெறுவதோடு, ஒன்றிய அரசிடமிருந்து அனைத்து திட்டங்களுக்கும் தாராளமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. ஆனால், தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய பாஜ அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பாஜவிற்கு ஆயுதம் எடுத்துக் கொடுப்பது நமது வேலையல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எம்பி சசிகாந்த் செந்தில் கூறுகையில்,‘ மாநிலங்களை அவற்றின் மொத்த கடனைக் கொண்டு மதிப்பிடுவது, ஒருவரின் உடல் எடையைக் கொண்டு அவரது உடல் தகுதியை மதிப்பிடுவதற்கு சமம். அதில் உயரம் இல்லை, தசை வலிமை இல்லை, வெறும் மேலோட்டமான பார்வை மட்டுமே உள்ளது,’என்றார்.

Related Stories: