சென்னை: அதிமுக பலம் தெரியாமல் புதிய கட்சி தொடங்கியவர்கள் பேசுகின்றனர். 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என்று திருத்தணி பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் பிரசார பயணம் நேற்று மாலை நடந்தது. அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் அதிமுகவினர் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திறந்த வாகனத்தில் நின்றபடி பேசியதாவது:
இதுவரை நடந்த 177 பிரசார கூட்டங்களில் சேர்ந்த கூட்டங்களில் திருத்தணி கூட்டம் முதல் இடம் பிடிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக கூடியுள்ளனர். புதிய கட்சி தொடங்கியவர்கள் (தவெக விஜய்) எல்லாம் அதிமுகவை பற்றி பேசுகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திருத்தணியில் ரீல்ஸ் மோகத்தில் சிறுவர்கள் வடமாநில வாலிபரை அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர். புத்தகங்கள் பிடிக்க வேண்டிய கைகள் போதை பொருட்கள் கட்டுப்படுத்தப்படாததால் பட்டா கத்தி பிடிக்கும் நிலைக்கு மாணவர்கள் வந்துள்ளனர்.
அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் மிக்சி, கிரைண்டர், மினி கிளினிக், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வருவோம். ஏழை எளியோருக்கு தளம் போட்ட வீடுகள் கட்டி கொடுப்போம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வருவோம். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவேற்றிய வாக்குறுதியை மீண்டும் நிறைவேற்ற சொன்ன எடப்பாடி
விவசாயிகள், நெசவாளர்களுக்கு திமுக ஆட்சியில் நன்மை கிடைத்ததா, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 கொடுக்கப்பட்டதா, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் உயர்த்தி வழங்கப்பட்டதா? என்று எடப்பாடி கேள்வி எழுப்பினார். உண்மையில், திமுக ஆட்சியில் தான் அதிக அளவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால் அதிக அளவில் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும், திமுக அரசு கூறிய வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
