சேலம்: சில்லறை பசங்களை வைத்து என்னை தினமும் அவமானப்படுத்துகிறார். அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. என்னை 30 துண்டாக வெட்டி போட்டு இருக்கலாம். என் பிள்ளை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். தந்தையாக நான் அவருக்கு என்ன செய்யவில்லை? என சேலம் பொதுக்குழுவில் கண்ணீர் மல்க ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் பாமக மாநில சிறப்பு செயற்குழு, பொதுக்கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஒரு கும்பல், அதுவும் நான் பொறுப்பு போட்டுக் கொடுத்த பிள்ளைகள், என்னை மிகவும் கேவலமாக தூற்றுகிறார்கள். என்னோடு, கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சில்லரை பசங்களை வைத்து, அன்புமணி அவமானப்படுத்துகிறான். ஒருநாள் ஜி.கே.மணி என்னிடம் வந்து, ஒன்னு காணாமல் போக வேண்டும், இல்லை சாக வேண்டும் என சொன்னார். அவ்வளவு தரக்குறைவாக பேசியதால், இப்படி அவர் என்னிடம் சொல்லி வேதனைப்பட்டார். இப்போது என்னை நேரடியாக தாக்க ஆரம்பித்துள்ளார்கள்.
எனக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. ஒரு நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில், என் தாய் வந்து ஏம்பா அழுகிறாய்? (அப்போது நா தழுதழுக்க கண்ணீர் விட்டு அழுதார்) எனக்கேட்டார். அதற்கு உன் பேரனால் (அன்புமணி) தான் என்றேன். ஒரு பதிவில், என் கழுத்தில் துணியை போட்டு இறுக்கி கொல்ல வேண்டும் எனக்கூறியிருக்கிறார்கள். அதற்கு தாய், நீ அப்படி பிள்ளையை வளர்த்து விட்டுள்ளாய், எனக்கூறினார். ஆமா மா, நான் சரியாக வளர்க்கவில்லை. அந்த பிள்ளை என் மார்பிலும், முதுகிலும் கண்ட இடத்தில் ஈட்டியால் குத்துகிறார். ஒரு தகப்பன், பிள்ளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை விட அதிகமாக செய்துவிட்டேன். ஒரு குறையும் வைக்கவில்லை. ஒரு ஆண்டுக்கு முன் சென்னையில் ஒரு குடும்பத்தில் சொத்துக்காக ஒரு பிள்ளை, தனது தந்தையை 20, 30 துண்டுகளாக வெட்டி காவேரிபாக்கம் என்ற இடத்தில் வீசினான். அதேபோல், என்னை செய்திருந்தாலும் அப்படியே போய் சேர்ந்திருப்பேன்.
அன்புமணியை அமைச்சராக்கினேன். மாநிலங்களவை எம்பி ஆனாய். உனக்கு என்ன குறை வைத்தேன். மான்போர்ட் பள்ளியில் படிக்க வைத்தேன். எம்எம்சி மருத்துவக்கல்லூரியில் படிக்க வைத்தேன். 36 வயதில் மத்திய அமைச்சராக்கி பார்த்திருக்கிறேன். என்னென்னவெல்லாம் ஒரு தகப்பனாக இருந்து செய்திருக்கிறேன். நான் மருத்துவர்களை பார்க்க போனால், அவர்கள் என்னிடம் ஏன் அன்புமணி இப்படி செய்கிறார் எனக்கேட்கிறார்கள். இன்னும் 5, 6 ஆண்டுகள் பொருத்திருக்க முடியாதா? என்கின்றனர். இந்த கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். இதற்கு நான், அவரை மாற்ற முடியாது, என்ன செய்வது எனக்கேட்கிறேன். என்னை போன்ற தகப்பன், உலகத்தில் யாருக்காவது கிடைத்திருப்பார்களா?. உனக்கு இதற்கு மேல் என்ன வேண்டும் என்ற அளவிற்கு செய்திருக்கிறேன். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை (கண்ணீர் விட்டு அழுகிறார். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், அழக்கூடாது அய்யா எனக்கூறி, அய்யா வாழ்க என்றனர்).
தொடர்ந்து ராமதாஸ் பேசுகையில், என்னை கேவலமாக எழுத சொல்லி வருவதால், நான் வேதனைப்படுகிறேன். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். சில நேரங்கள் என்னால் தூங்க முடியவில்லை. அப்போதெல்லாம் என் பாமக தொண்டர்களை நினைத்தும், என்னை தைலாபுரம் தோட்டத்திற்கு பார்க்க வருவோர்களை நினைத்தும் பார்த்து தூங்குகிறேன். எனது சொந்தம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் தான். அது எந்த சமுதாயமாக இருந்தாலும், என் சொந்தமே. எப்போதும், என்னை நேசிப்பார்கள். 100க்கு 95 சதவீத மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. போகும் இடங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்து, பம்மாத்து வேலையை அன்புமணி காட்டுகிறார். அதனால், வரும் சட்டமன்ற தேர்தல் அன்புமணிக்கு சரியான பதிலை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி அறிவிப்பு எப்போது?
பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பேசுகையில், ‘இந்தத பொதுக்குழுவில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணி பற்றி இப்போது அறிவிப்பேனா?, பின்னர் அறிவிப்பாரா? அல்லது இன்னும் 2 நாட்களுக்கு பின் வரும் அடுத்த ஆண்டில் அறிவிப்பாரா? என்பதை அறிய ஆவலுடன் உள்ளீர்கள். நீங்கள் ஊர் திரும்பியதும், யாரோடு கூட்டணி அமைக்கிறீர்கள் என உங்களிடம் மக்கள் கேட்பார்கள். அதற்கு அய்யா சொல்லியிருக்கிறார், நல்ல முடிவெடுப்பார், அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் எனக்கூறுங்கள். கிராமங்களில் சின்ன பையன் கூட 10.5 சதவீதம் என்ன ஆச்சு என்று கேட்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், அதனை நிச்சயம் பெறுவோம். கூட்டணி பற்றி அறிவிக்க நேரம் இன்னும் கனியவில்லை. அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும். உறுதியாக நம்புகிறேன். நான் நினைப்பது நிச்சயம் நடக்கும். அதனால், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அனைவரும் அயராது பாடுபட வேண்டும்’ என்றார்.
பின்னர், தனியார் ஓட்டலில் பேட்டியளித்த ராமதாஸ், சேலத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து அறிவிக்கும்போது அறிவிப்பேன். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் யாரும் ஏமாறவில்லை. நான் எப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பேன் என்று அவர்களுக்கு தெரியும்’’ என்றார்.
பசுமை தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா நீக்கம் ஸ்ரீகாந்தி நியமனம்: மருமகள் ‘அவுட்’
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, நிறுவனர் ஒப்புதல் இல்லாமல் பாமக கொடியை பயன்படுத்திக்கொண்டு மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருவதும், அக்கூட்டங்களில் நிறுவனர் ராமதாசை அவமானப்படுத்தி அவதூறு செய்தி பரப்பி வருவோரை உடன் வைத்துக் கொண்டு ஊக்கப்படுத்தி வருவதால், சௌமியா அன்புமணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பசுமை தாயகம் அமைப்பின் புதிய தலைவராக ஸ்ரீகாந்தி ராமதாஸ் நியமிக்கப்படுகிறார் எனத் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்துக்கு பின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி நிருபர்களிடம் கூறுகையில், `பசுமை தாயகம் தலைவராக சிறப்பாக செயல்படுவேன் என அய்யா நினைத்ததால் என்னை நியமித்துள்ளார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிக்கப்படும். அப்பாவின் கஷ்டத்தை பார்க்க முடியாமல், என் மனம் வருத்தமாக இருந்தது. அதனால் தான் கடுமையாக அன்புமணியை விமர்சித்தேன்,’’ என்றார்.
ஜி.கே.மணியை நீக்கிய அன்புமணிக்கு கண்டனம்
ராமதாசுடன் 46 ஆண்டுகள் பயணித்தும், 25 ஆண்டுகள் கட்சியின் தலைவராகவும், 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக கட்சிக்கு தொடர்பில்லாத நபர்கள் (அன்புமணி) அறிவித்ததற்கு செயற்குழு, பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது என்றும், பாமக நிறுவனர் ராமதாசை அவமானப்படுத்தி பேசி வரும் கூலிக்கு மாரடிக்கும் கும்பலை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, அருள் ரத்தினம், வினோபா பூபதி, வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை செயற்குழு, பொதுக்குழு வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலுக்கு பின் அன்புமணி ஜீரோ: அருள் எம்எல்ஏ ஆரூடம்
அருள் எம்எல்ஏ பேசியதாவது: அன்புமணியை படிக்க வைத்து, உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் ராமதாஸ். சமூகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அவரை அவமதிப்பது போல் அன்புமணி செயல்படுவது மிகவும் கொடுமையானது. இப்படி ஒரு பிள்ளையை எந்த ஒரு பெற்றோரும் பெற்றுவிடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றனர். கட்சியினர் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழக மக்களும், அன்புமணியை போன்ற மகனை ராமதாஸ் பெற்றது துரதிஷ்டம் என்று கூறி வேதனைப்படுகின்றனர்.
தேர்தலுக்கு பிறகு அன்பு மணி ஜீரோவாகி விடுவார். சிறை நிரப்பும் போராட்டம் நடத்த அன்புமணி அழைப்பு விடுத்தார். ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அந்த போராட்டம் கைவிடப்பட்டது. அன்புமணியுடன் பொய்யர்களும், போலியானவர்களும் மட்டுமே இருக்கின்றனர். தேர்தலுக்கு பிறகு அவர்களும் இருக்க மாட்டார்கள். ராமதாஸ் பேச்சை கேட்டு அவருக்கு ஆதரவு அளித்து தேர்தல் பணியாற்றுவோம். அவர் ஆதரவு அளிக்கும் கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றியை பெறும். இவ்வாறு அருள் எம்எல்ஏ பேசினார்.
பாமகவின் தலைவராக மீண்டும் தேர்வு; கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம்
சேலம்: பாமகவின் தலைவராக ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி சேலத்தில் நடந்த பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவின் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று, சேலத்தில் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, செயல்தலைவர் ஸ்ரீகாந்தி முன்னிலை வகித்தனர். இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ வரவேற்றார்.
கூட்டத்தில், பாமக தலைவராக ராமதாஸ், கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல்தலைவராக ஸ்ரீகாந்தி ராமதாஸ், பொதுச்செயலாளராக முரளிசங்கர், பொருளாளராக மன்சூர் உசேன் ஆகியோரை ஒருமனதாக தேர்வு செய்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கும், உரிய நேரத்தில் அரசியல் கட்சிகளுடன் பேசி வெற்றிக் கூட்டணியை அமைப்பதற்கும் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கு செயற்குழு, பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது.
அதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கவும், வேட்பாளர்கள் அங்கீகரிக்க படிவம்-ஏ, படிவம்-பி ஆகியவற்றில் கையொப்பமிடும் முழு அதிகாரத்தையும் அவருக்கு வழங்குகிறது என 2வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பாமகவின் உயிர்மூச்சு கொள்கையான சமூக நீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும், எல்லா சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவும் வலியுறுத்தி பாமக சார்பில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
முழு மதுஒழிப்பு கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம், நாகப்பட்டணம் மீனவர்கள் தாக்கப்படுவது, சிறையில் அடைப்பதை தடுக்க நிரந்தர தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தொடர் முயற்சி மேற்கொள்வதை தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளதை 152 ஆக உயர்த்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படுவதுடன், உயர்நீதிமன்ற கிளை துவங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
டாக்டர் பட்டம், அமைச்சர் பதவி, கார், கோட் சூட் எல்லாம் எப்படி வந்துச்சு.? ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம் அன்புமணிக்கு எல்லாமே அவர் போட்ட பிச்சை
சேலத்தில் நடந்த பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. கட்சியினர் அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளினர். இதனால் உற்சாகமான ஸ்ரீகாந்தி, அன்புமணியை கண்டித்து ஆவேசத்துடன் பேசினார். கூட்டத்தில் ஸ்ரீகாந்தி பேசியதாவது: பல கிலோமீட்டர் பயணம் செய்து, எதுக்காக நாம் இங்க கூடியிருக்கிறோம். பதவிக்கா? பணத்துக்கா? சில கும்பலை போல நாடகம் ஆடவா? மக்களை ஏமாத்தவா? இல்லவே இல்ல. இன்னைக்கு காலையில் ராமதாசை பார்த்தேன். எந்த மனுஷன் கர்ஜிச்சாரோ, எந்த மனுஷன் தமிழ்நாட்டு அரசியலையே 40 ஆண்டாக கலக்கினாரோ, அந்த மனுசன் கண்ணீரில் இன்று ஒரு வலி தெரிந்தது. அது தான், பெத்த மகன் சுயநலத்துக்காக முதுகில் குத்தின வலியாகும். இந்த புத்தாண்டில் ராமதாசின் கரத்தை வலுப்படுத்துவோம்.
ராமதாஸ் சிறையில் படுத்து தூங்கினார். தன் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தினாரு எதுக்கு? தன் மகன் ஏசி ரூமில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல. வன்னிய சமூக மக்கள் படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தார். ஆனா தம்பி அன்புமணி என்ன செய்தார். நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால், அங்கு வெறும் 15 சதவீதம் நாட்கள் தான் சென்றார். இதுக்கு பேர் தான் தலைவனா?. இதுக்கு பேர் உழைப்பா? இதுக்கு பேர் தான் பொறுப்பா? ராமதாஸ் பெயரை சொல்லி பதவி வாங்குவது, அப்புறம் ராமதாசை தூக்கி எறிவது. இதுக்கு பேர் அரசியல் இல்லை தம்பி. இதுக்கு பேர் பச்ச துரோகம். சுயநலம், பேராசை. இன்று சிலபேர் கிளம்பி இருக்கிறார்கள். அன்புமணிதான் இனி எல்லாம் என்று சொல்லும் அவர்களிடம் கேட்கிறேன்.
ராமதாஸ் கிராமம், கிராமமாக போய் கட்சியை வளர்த்தபோது எங்கு போனீர்கள். மாம்பழம் சின்னம் கிடைக்காமல் போனபிறகு நீங்கள் என்ன செய்தீர்கள். நம் கட்சிக்கு அங்கீகாரம் ரத்தானபோது நீங்கள் என்ன கிழிச்சீங்க. கட்சியை கண்டுக்காமல் சுயநலமாக இருந்தீர்கள். இப்போது வந்து நான் தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ராமதாசுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். அவருக்கு இந்த மக்கள் மேல் தான் பைத்தியம்.
ராமதாஸ் பாமகவின் ஆன்மா, உயிர். உயிரை எடுத்துவிட்டு உடம்பு நடமாட முடியுமா?
ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம். அந்த பிணத்தை வைத்து அரசியல் பண்ணலாம் என்று அன்புமணி தரப்பு நினைக்கின்றனர். ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரையும், இங்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரையும் அது நடக்காது. ராமதாசை எதிர்க்கும் அந்த கும்பலை பார்த்து நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். டேய் நீங்கள் யாருடா?. உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ராமதாசை கேள்வி கேட்க. இன்று கோட்-சூட் போட்டு, காரில் வந்து இறங்குறீங்களே தம்பி அன்புமணி. அந்த கோட்-சூட் யார் கொடுத்தது. உங்களை படிக்க வைத்தது யார்? நீங்களாகவே வாங்கியதா அந்த டாக்டர் பட்டம்? அந்த கார் யார் கொடுத்தது? எம்பி பதவி, ராஜ்சபா பதவி யார் கொடுத்தது? என்று சொல்லுங்க தம்பி. இது நீங்க உழைத்து வாங்கவில்லை. ராமதாஸ் உங்களுக்கு போட்ட பிச்சையாகும். இவ்வாறு ஸ்ரீகாந்தி பேசினார்.
ஆர்எஸ்எஸ் அடிமைகள்
கூட்டத்தில் ஸ்ரீகாந்தி பேசுகையில், ‘‘இங்கு தீவிரமாக கட்சி பணியாற்றி வரும் எம்எல்ஏ அருளையும், பாமக கவுரவத்தலைவர் ஜி.ேக.மணியையும் திமுக கைக்கூலிகள் என்று அன்புமணி தரப்பினர் கூறுகின்றனர். அப்படி சொல்பவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள் என்பதையும் நான் இங்கு பதிவு செய்கிறேன். வரும் தேர்தலில் ராமதாஸ் ஆதரவு அளிக்கும் கூட்டணியே அமோக வெற்றி பெறும். 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் பாமகவின் இலக்கு இருக்கும்,’’ என்றார்.
அன்புமணி செய்தது மாபெரும் துரோகம்: தலையணையால் அமுக்கி அப்பாவை ெகால்லுங்கள் என்று கூறுபவர் மகனா?
பொதுக்குழுவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது: பெற்றெடுத்து ஆளாக்கி, மத்திய அமைச்சராக அழகு பார்த்த ராமதாஸை அன்புமணி கொச்சைப்படுத்தி வருகிறார். மணி எனக்கு வலிக்குது என்று ராமதாஸ் கூறினார். ராமதாஸ் கட்டி காத்து வரும் பாமகவை சதியால், சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தனர். ராமதாசால் உருவாக்கப் பட்டவர்கள், பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் அன்புமணியுடன் சென்றுள்ளனர். அங்கு போனவர்கள் எல்லாம் வேதனைப்படுகின்றனர். மனசாட்சி உறுத்துகிறது. இந்த கிழவனை தலையணை அமுக்கி ெகால்லுங்கள், கழுத்தில் காலை வச்சி கொல்லுங்கள் என்று ஒன்றும் தெரியாத தம்பிகள் பேசுகின்றனர். அவர்களை தூண்டிவிடுவது அன்புமணி. அவ்வாறு பேசுபவர்களை கூப்பிட்டு சால்வை போட்டு பொறுப்பு கொடுக்கிறார் அன்புமணி. இதுவா அப்பாவுக்கு செய்யும் நன்றிக்கடன். இது நன்றிக்கடன் அல்ல.
உலகத்திலேயே யாரும் செய்யாத மாபெரும் துரோகம். யாராலும் மன்னிக்க முடியாது. அதனால் அன்புமணிக்கு நான் எச்சரிக்கையோடு சொல்லுகிறேன். இனி உங்களால் பாமகவை கைப்பற்ற முடியாது, அபகரிக்க முடியாது. எந்த காலத்திலும் பாமக என்று சொன்னால் ராமதாஸ் தான். இனி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள் அன்புமணி. 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை ராமதாஸ் உருவாக்குவார். 2025ம் ஆண்டு சனியன் பிடித்த ஆண்டு. இந்த பீடை, டிசம்பர் 31ம் தேதியோடு (நாளை) முடிகிறது. 2026ம் ஆண்டு ராமதாசுக்கு நல்ல ஆண்டாக அமையணும். இது வெற்றி ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? மாமாவுக்கு கண்ணை மறைக்கும் பதவி வெறி
பாமக மாநில செயற்குழு உறுப்பினர் சுகந்தன் பேசுகையில், ‘‘கட்சிக்காக உழைத்த முகுந்தனுக்கு பொறுப்பு வழங்கினால் மாமா அன்புமணிக்கு ஏன் கோபம் வருகிறது? நாங்கள் வணங்கும் தாத்தா ராமதாஸ் முன்பே, அன்புமணி கூட்டத்தில் மைக்கை தூக்கிபோடுகிறார். சீன் போட்டு கெத்து காண்பிக்கிறார். இதை எல்லாம் மேடையில் ராமதாசை வைத்துக்கொண்டு செய்கிறார். இது எவ்வளவு கேவலம் தெரியுமா? என் மாமாவுக்கு ஒரு கேள்வி. நீங்கள் கட்சியில் சேர்ந்தது 2004ம் ஆண்டாகும். அதே ஆண்டு இளைஞரணி தலைவர், ராஜ்சபா உறுப்பினர், மத்திய அமைச்சரானீர்கள். நீங்கள் கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் மத்திய மந்திரி ஆகலாம். ஆனால் கட்சிக்கு உழைத்த என் தம்பி முகுந்தனுக்கு பொறுப்பு வழங்கினால் ஏன் ஆத்திரம் வருகிறது? உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
பதவி வெறி கண்ணை மறைத்தால், பெற்ற தகப்பன் கூட எதிரியாக தான் தெரிவான். மாமாவின் கண்ணை பதவி வெறி மறைக்கிறது. ராமதாசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு தாத்தா மட்டுமில்லை, என்னுடைய ஹீரோ. ராமதாஸ் கட்சி தொடங்கி பலரை எம்எல்ஏ., மந்திரியாக்கி அழகுபார்த்தார். என் மாமாவை மத்திய அமைச்சர் ஆக்கினார். ஆனால் ராமதாஸ் எந்த பதவியிலும் அமரவில்லை. எந்த சேர் மீதும் ஆசைப்படவில்லை. என் மக்கள் நல்லா இருந்தால்போதும், என் வன்னியர் மக்கள், என் மக்கள் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே தலைவர் ராமதாஸ் தான். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு அப்புறம் யார் ரியல் ஹீரோ, யார் ஜீரோ தெரியும். களம் நமது, வெற்றி நமதே,’’ என்றார்.
