கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

*மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கடந்த 4.11.2025 அன்று தொடங்கப்பட்டு வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்று அதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு கடந்த 19.12.2025 அன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்படி வரைவு வக்காளர் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் 01.01.2026 அன்று 18 வயது நிறைவடையும் முதல் முறை வாக்காளர் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் முறையே தங்களது பெயரை சேர்க்கவோ அல்லது தங்களது பெயர், உறவுமுறை ஆகியவற்றை மாற்றம் செய்ய ஏதுவாக படிவங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும் சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இச்சிறப்பு முகாம் 03.01.2026 சனிக்கிழமை, 4.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. மேற்கண்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வாக்காளர் தங்கள் பெயர்களை சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.govin என்ற இணையதளத்திலும் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: