புதுப்பட்டினம் உப்பனாற்றின் கரை சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

*அகற்ற வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் உப்பனாற்றின் கரை சாலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமத்திலிருந்து புளியந்துறை வழியாக புதுப்பட்டினம், தற்காஸ் தாண்டவன்குளம் மற்றும் பழையாறு துறைமுகத்திற்கு செல்லும் சாலையில் புதுப்பட்டினத்தில் உப்பனாற்றின் வலது கரை சாலையில் கடந்த ஒரு மாத காலமாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குவியல் குவியலாக இருந்து வருகிறது.

அப்பகுதியில் உள்ள கடைவீதி குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் சேகரிக்கப்படும் அனைத்து வகையான குப்பைகளும் ஒரே இடத்தில் எடுத்து வந்து கொட்டப்படுகிறது.

இதில் மக்காத குப்பைகளுடன் இறந்த விலங்கினங்கள்,கோழி இறைச்சி மற்றும் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த சாலை வழியே செல்பவர்கள் இதனால் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மக்கும் மற்றும் மக்களாத குப்பைகள் இறந்த விலங்கினங்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை சாலையை ஒட்டி உள்ள உப்பனாற்றில் தண்ணீரில் கலந்து தண்ணீர் மாசுபாடு அடைந்து வருகிறது. இந்த இடம் அதிக கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது.

குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டுவதன் மூலம் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கலாம். எனவே குப்பை குவியலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: