கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி!!

சிவகங்கை : கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு 2014ம் ஆண்டு முதல் இதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல, அருகில் உள்ள கொந்தகை, அகரம்,மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடிஅகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே கீழடியில் நடைபெற்ற 10-ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்தது. இதனையடுத்து கீழடியில் 11-ம் கட்ட அகழாய்விற்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி வழங்கியது. கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது. ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: