தொடர் விடுமுறையை கொண்டாட வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆண்டிபட்டி : தொடர் விடுமுறையையொட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.ஆண்டிபட்டி அருகே வைகை அணை பகுதியில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமாக திகழ்கிறது.

வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பூங்காவில் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம். அதன்படி நேற்று வைகை அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களிலும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது.

இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமானோர் குடும்பத்துடன் பொழுதைக் கழித்தனர். சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க் பகுதிகளில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் செல்பி, புகைப்படங்கள் எடுத்தபடி உற்சாகமாக சுற்றிவந்தனர்.

சிலர் சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். நீர்த் தேக்கப்பகுதியையும் கண்டு ரசித்தனர்.இந்நிலையில் பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையையொட்டி நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர்.

சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளிலும் விளையாடினர்.
மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து பொழுதைக் கழித்தனர்.

Related Stories: