உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 500 மாணவிகள் பங்கேற்ற திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மார்கழி மாதங்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சி பல்வேறு பிரசித்தி பெற்ற மிகப் பெரிய கோயில்களில் மட்டும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் நடராஜர் நாட்டியாலயா சார்பில் உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் அருகே திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சுமார் 500 மாணவிகள் குழுவாக பங்கேற்று ஆண்டாள் வேடமிட்டபடி சுமார் 1.30 மணி நேரம் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் நடனமாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த நடன நிகழ்ச்சி ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் நாட்டிய ஆசிரியை பொற்கொடி பரத்துக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டது. முடிவில் பங்கேற்ற நடனமாடிய மாணவிகள் அனைவருக்கும் உலக சாதனை விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
