*இறுதி கட்டத்தை எட்டியது
ஊட்டி : 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊட்டி அரசு கலை கல்லூரி கட்டிடம் ரூ.8.20 கோடியில் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை கலெக்டராக இருந்த ஜான் சலீவன் லண்டனில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை போல் ஊட்டியிலும் கட்ட முடிவு செய்தார்.
நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான தோடர்களிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை வாங்கி 18ம் நூற்றாண்டில் ஊட்டி சேரிங்கிராஸ் மேல் பகுதியில் கல்லால் ஆன தனி மாளிகையை கட்டினார் ஜான் சலீவன்.
இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கட்டிடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். நகரின் மையத்தில் சேரிங்கிராஸ் அருகே மலையில் ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டதால், இப்பகுதி ஸ்டோன் ஹவுஸ் ஹில் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோடை காலத்தில் சென்னை மாகாண தலைமை செயலகம் இங்கு செயல்பட்டது. சென்னை மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோ, இங்கு தங்கி அலுவல் பணிகளை கவனித்தார்.
இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர், கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது. கலெக்டர் பங்களா, காலபோக்கில் அரசு கல்லூரி முதல்வர் குடியிருப்பாக மாறியது. தற்போது, இந்த கட்டிடம் அரசு அருங்காட்சியகமாக உள்ளது. இதே வளாகத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மணிக்கூண்டு கட்டிடம் தான் தற்போது ஊட்டி அரசு கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தற்போது 200 ஆண்டுகளை கடந்துள்ளது.
1955ம் ஆண்டு உயர் கல்வித்துறைக்கு அப்போதைய முதல்வர் காமராஜர்,கல்வி அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோர், இந்த கட்டிடத்தை வழங்கினர். கோவை பாரதியார் பல்கலைக்கழக கட்டுபாட்டின் கீழ் உள்ள இக்கல்லூரியில் இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தமிழ், ஆங்கிலம்,வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல் என 18 துறைகள் உள்ளன. இளநிலை,முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை அளிக்கப்படுகின்றன. அன்று முதல் இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் உயர் கல்வி கனவை மெய்ப்பிக்கும் ஒரே கல்வி நிறுவனமாக இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.
நீலகிரியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி சமவெளி பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இளநிலை வன விலங்கு உயிரியல்,ராணுவத்தில் பணிபுரியும் வகையில் இளநிலை பாதுகாப்பியல் ஆகிய பிரத்யேக படிப்புகளும் இங்கு உள்ளது. பாரம்பரியமிக்க இக்கட்டிடத்தை பாதுகாக்கும் வகையிலும், அதன் பழமை மாறாமலும் புதுப்பிக்க ரூ.8.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இப்பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
