காஞ்சிபுரம், டிச.29: காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் மாடவீதிகளில் அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திணறுகின்றனர். காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்தையொட்டி பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், காஞ்சி சங்கர மடம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த, பகுதிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கார் மற்றும் பஸ் மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய முறையான இடவசதி இல்லாததால் கிழக்கு ராஜவீதி, தெற்கு மாடவீதி, கிழக்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, உலகளந்த பெருமாள் கோயில் மாடவீதி, காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பார்க்கிங் செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்த, சாலைகள் வழியாகத்தான் பிரபல தனியார் பள்ளிக்கு ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் வந்து செல்கின்றனர். எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி தொடங்கும் காலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர் மற்றும் சைக்கிளில் வரும் மாணவர்கள், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, திணறுகின்றனர். மேலும் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கில் பேருந்து மற்றும் கார்கள் மூலம் வருகை தருகின்றன. அப்படி வரும் பக்தர்கள் கோயில் அருகிலேயே தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு சென்று விடுகின்றனர்.
அதற்கும் அப்பகுதியில் சிலர் பார்க்கிங் கட்டணம் என்று ரூ.100, 200 என்று வசூல் செய்து வருகின்றனர். இதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கோயிலுக்கு அருகில் ஏதேனும் இடத்தை தேர்வு செய்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
