டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறை சம்பவங்கள் பெருகி உள்ளன. இந்நிலையில், பரித்பூர் ஜில்லா பள்ளியின் 185வது ஆண்டு விழா கொண்டாடங்களின் நிறைவாக பிரபல ராக் பாடகர் ஜேம்சின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வங்கதேசத்தின் புகழ் பெற்ற ‘நகர் பால்’ ராக் இசைக்குழுவின் பாடகர் ஜேம்ஸ், ‘கேங்ஸ்டர்’, லைப் இன் ஏ மெட்ரோ’ உள்ளிட்ட பல பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களை பாடியவர். இந்த இசை நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்பாக, வெளியில் இருந்து வந்த ஒரு கும்பல் மேடை மீது ஏற முயன்றது.
மாணவர்கள் அவர்களை தடுத்த நிலையில், செங்கல் உள்ளிட்ட பொருட்களை வீசி அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 20 மாணவர்கள் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கும்பல் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
* 17 ஆண்டுக்குப் பிறகு வாக்காளரான தாரிக்
வங்கதேசத்தை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்துள்ள வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், மீண்டும் வங்கதேச வாக்காளராக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்று தனது பயோமெட்ரிக் ஆதாரங்களை அளித்து முறைப்படி பதிவு செய்தார்.
