டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மனோஜ் சாய் லெல்லா (22) என்ற இந்திய வம்சாவளி மாணவர் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி மனோஜ் சாய் லெல்லாவை பிரிஸ்கோ நகரப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மன அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கும் தீ வைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகக் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது குடியிருப்புப் பகுதிக்குத் தீ வைத்தல் மற்றும் குடும்பத்தினருக்குத் தீவிரவாத மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் கொல்லின் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாகாணச் சட்டப்படி இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
