×

நாட்டுக்கல்பாளையம் சாலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

*ஆறாக ஓடியதால் மக்கள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள நாட்டுக்கல்பாளையம் ரோட்டின் ஒரு பகுதியில் கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டுகுடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுக்கு மேல் கடந்ததால், குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய் பதிக்கும் பணி கடந்த வாரமாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இதில் நேற்று நாட்டுக்கல்பாளையம் ரோட்டின் ஒரு பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அந்த ரோட்டின் மற்றொரு பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தாலும், ரோட்டோரம் வீடு உள்ளிட்ட கட்டிட பணிகள் நடக்கிறது.

பொக்லைன் இயந்திரம் பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேற துவங்கியது. நேரம் செல்லச்செல்ல மேல்பகுதியில் பீய்ச்சியவாறு தண்ணீர் சென்றதுடன், குபுகுபுவென தண்ணீர் வெளியேறி ரோட்டில் ஆறுபோல் சென்றது.

கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு, சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதை கண்டு பொது மக்கள் வேதனையடைந்தனர். எனவே, அதனை விரைந்து சீர் செய்து, மீண்டும் குழாய் உடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Nattukkalpalayam road ,Pollachi ,Vanjiyapuram ,Valparai road ,
× RELATED கும்பகோணம்: சீனிவாசபெருமாள்...