×

கோத்தகிரி ஒன்னட்டி பகுதியில் கிணறு வெட்டும் பணியின் போது மண்திட்டு சரிந்து 2 தொழிலாளர்கள் பலி

கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னட்டி பகுதியில் தனியார் நிலத்தில் கிணறு வெட்டியபோது மண் திட்டு சரிந்து விழுந்ததில் 2 பேர் இடிபாடில் சிக்கி உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி ஒன்னட்டி பகுதியில் தனியார்க்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று வழக்கம்போல் கோத்தகிரி அருகே உள்ள குண்டடா பிரிவு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (50), சதீஷ்குமார்(45) உட்பட 8 தொழிலாளர்கள் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிணற்றின் சுற்றுவட்டத்தில் மண் சமப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மண் திட்டு இடிந்து விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டு இருந்த பன்னீர்செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் மண் இடிபாடில் சிக்கி வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இருவரது சடலங்களை கயிறு கட்டி மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் சோலூர்மட்டம், கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Onnati ,Kotagiri ,Kottagiri Onnati ,Kotagiri Onnati ,Neelgiri district ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதிகளில்...