×

கும்பகோணம்: சீனிவாசபெருமாள் திருக்கோவிலில் கல்கருடசேவை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாசப்பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள்பாலிப்பதால் இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது.

இதில் மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையினை நிறைவேற்ற அவரது மகளாக தோன்றிய மகாலட்சுமியை மானிட உருவத்தில் வந்து சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புரிந்து கொண்டார். திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்கள் அருளி மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட புண்ணிய தலமும் ஆகும். இத்தலத்தில் உலகிலேயே ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல்கருடன் பகவான் தனி சன்னதி கொண்டு மூலவராகவும், உற்சவராகவும் அருள்பாலித்து வருகிறார்.

மற்ற சுவாமிகளை போல இவருக்கும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறும் வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் என 2 முறை மட்டுமே சன்னதியில் இருந்து வெளிவரும் இக்கல்கருட பகவானை தொடர்ந்து 7 வியாழக்கிழமை வழிபடுவதன் மூலம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத முக்கோடி தெப்பத்திருவிழா பத்து தினங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்கான விழா கடந்த 23ம் தேதி காலை உற்சவர் சீனிவாசபெருமாள் வஞ்சுளவல்லி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளும் சூரியபிரபை, யாழி, கிளி, சேஷ, அனுமந்த, கமல, வெள்ளி யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான கல்கருட சேவை நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் பெருமாளும், தாயாரும் வாகன மண்டபத்தில் எழுந்தருள சிறப்பாக நடைபெற்றது. அப்போது கல்கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில், நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் இசையுடன் சன்னதியில் இருந்து புறப்பட, முதலில் 4 பேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர், 128 பேர் என தூக்குபவர்களின் எண்ணிக்கையுடன் கல்கருட பகவானை தோளில் தூக்கி, வீதியுலா புறப்பாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்கருடன் மீண்டும் சன்னதிக்கு திரும்பும் போது 128, 64, 32, 16, 8 என குறைந்து 4 பேருடன் சன்னதியை சென்றடைந்தது. இந்த விழாவில் செயல் அலுவலர் பிரபாகரன், கோயில் பட்டாச்சாரியார் கோபிநாத் உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கல்கருட வாகனத்தில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் அன்னபட்சி வாகனத்தில் ஓலை சப்பரத்தில் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் 30ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து 31ம் தேதி இரவு பெருமாள் தாயார் தெப்பத்தில் எழுந்தருள தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

Tags : Kumbakonam ,Kalkar Service ,Sinivasaberumal Temple ,Thanjavur ,Siniwasaparumal Temple ,Nachiyarkoil ,Siniwasapperumal ,Vanjulavalli ,Sametarai ,
× RELATED பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை...