×

மதுரை மாவட்டத்தில் பலரின் கனவுகள் நனவானது 886 பேருக்கு ரூ.8.86 கோடி மானியத்தில் ஆட்டோக்கள்

*உழைப்பை ஊக்கப்படுத்துவதாக திருநங்கை நெகிழ்ச்சி

மதுரை : மதுரை மாவட்டத்தில் 886 பேருக்கு ரூ.8.88 கோடி மானியத்தில் தமிழக அரசின் தரப்பில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கை உழைப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, திருநங்கை ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில், உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உள்ளிட்ட 19 நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்கள், திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவித்து, அதிக வருமான ஈட்டும் வகையில் சுயதொழில் செய்திட, புதிய ஆட்டோ வாங்குவதற்குரிய செலவில் ஆயிரம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகமானது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த 2023 முதல் தற்போது வரை 833 பெண்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.8.33 கோடி, 53 திருநங்கைகளுக்கு ரூ.53 லட்சம் என, ரூ.8.86 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்இணையம் சார்ந்த 10 கிக் தொழிலாளர்கள் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை (தொலைபேசி எண் அவசியம்) குடும்ப அட்டை, வயது ஆவணம், சாதி சான்றிதழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், நியமனதாரரின் வயது ஆவணம், தொழிலாளியின் புகைப்படம், ஆட்டோ மானியம் – ஓட்டுநர் உரிமம், விலைப்புள்ளி பட்டியல், விற்பனை முகவரின் உறுதிமொழி மற்றும் பயனாளியின் உறுதிமொழி உள்ளிட்ட ஆவணங்களை tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, மதுரையை சேர்ந்த திருநங்கை ருத்ரா கறும்போது, ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியத்தில் ஆட்டோ வழங்கியது சந்தோஷம். வீட்டிலிருந்து புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு தன்னம்பிக்கையுடன் ஆட்டோ வழங்கியது மகிழ்ச்சியை மட்டுமின்றி, உத்வேகத்தையும் தருகிறது. நாங்கள் சுயமாக உழைத்து, சம்பாதிக்க ஊக்கப்படுத்துகிறது. முதல்வருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி’’ என்றார்.

ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த பெண் பயனாளி உமா கூறும்போது, ‘‘என் கணவரும், நானும் ஆட்டோ ஓட்டுநர்கள். வாடகை ஆட்டோவால் போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டோம். இதனால், கஷ்டத்திலிருந்து மீள முடியவில்லை.

சொந்த ஆட்டோ என்பது எங்கள் கனவாக இருந்தது. தற்போது அரசு தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியத்தில் ஆட்டோ வழங்கியது அந்த கனவை நிஜமாக்கியதால் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வாழ்வாதாரம் உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய முதல்வருக்கு, நெஞ்சம் நிறைந்து நன்றி தெரிவிக்கிறோம்’’ என்றார்.

மதுரையை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஷேக் முகம்மது கூறும்போது, ‘‘டெலிவரி வேலை செய்யும் நான் பெட்ரோலுக்கு மட்டும் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்தேன். இணையம் சார்ந்து டெலிவரி செய்பவன் என்ற அடிப்படையில் ரூ.20 ஆயிரம் மானியம் பெற்றுள்ளேன்.

புதிய இ – ஸ்கூட்டர் வாங்க இது மிகவும் உதவியது. முதல்வரின் கையால் வாகனத்தின் சாவியை பெற்றது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசிற்கும், முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்’’ என்றார்.

Tags : Madurai ,Government of Tamil Nadu ,Madurai district ,Tamil Nadu ,
× RELATED கும்பகோணம்: சீனிவாசபெருமாள்...