கோவை : கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக-கேரளா எல்லையான வாளையார் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 7 இடங்கள் உள்பட 19 இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியை கால்நடை பராமரிப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழி, வாத்து, காடைகள் அதிகளவில் இறந்தது. இதையறிந்த கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இறந்த பறவைகளின் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பினர்.
இதில், உயிரிழந்த பறவைகளுக்கு, ‘எச்1 என்1’ பறவைக் காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக மாவட்டங்களில் சோதனைச்சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழக-கேரள எல்லையான வாளையார், வேளந்தாவளம், ஆனைகட்டி, முள்ளி உள்பட 12 இடங்களில் சோதனை சாவடிகள் நேற்று அமைக்கப்பட்டன.இந்த சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், கேரளாவில் இருந்து கோழிகள், கோழி தீவனங்கள், கோழி சார்ந்த பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை தமிழகத்திற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
தவிர, தமிழகத்திற்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக- கேரளா எல்லையான வளையார் பகுதிகளில் பறவை காய்ச்சல் தொடர்பான பணிகளை நோய் நிகழ்வியல் அலுவலர் அகிலன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கோவை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம், உதவி இயக்குனர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் கீதா ஆகியோர் இருந்தனர்.
இதே போல நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், கூடலூர் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகாணி, தாளூர், சேரம்பாடி சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கூடலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறுகையில், கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டரியப்பட்டுள்ளதால் கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின் பேரில் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டை ஏற்றிவரும் வாகனங்களை கண்டரிந்து அதனை திருப்பி அனுப்புகின்றோம். மேலும் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது என்றார்.
