புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமன பரிந்துரைகள் தொடர்பாக அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கறிஞர் அ.பிரேம் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான நீதிபதி ஜெ.நிஷா பானு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பெற்றிருந்த போதிலும், அங்கு பொறுப்பேற்காத காலகட்டத்தில் சட்டப்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவே தொடர்ந்தார்.

இந்நிலையில், அவரை கொலீஜியத்தில் சேர்க்காமல், நான்காவது மூத்த நீதிபதியுடன் கொலீஜியம் அமைத்து நீதிபதி நியமன பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாலும் அவர் புதிய நீதிமன்றத்தில் பதவி ஏற்கும் நாள் வரை ஏற்கனவே பணியாற்றிய நீதிமன்றத்திலேயே நீதிபதியாக தொடர்வார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது பரிந்துரைக்கப்பட்ட அனைவரும் அரசியல் பின்னணி, அரசியல் அமைப்புகளுடன் தொடர்பானவர்கள். மத்திய அரசு மற்றும் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி அரசியல் கட்சிகளிடம் நெருங்கிய தொடர்புடையவர்கள். இது நீதித்துறை தனித்துவத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும்.

எனவே, தற்போதைய கொலீஜியம் பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். சரியான கொலீஜியம் அமைப்புடன் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரிக்குமாறு விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், தனபால் ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories: