திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று அளித்த பேட்டி: பாமக சார்பில் வரும் 29ம் தேதி சேலத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் ராமதாஸ் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார். இந்த கூட்டத்தை விரும்பாத மற்றொரு தரப்பினர் சேலம் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்து ராமதாஸ் பொதுக்குழு நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று சொல்வது மிகவும் அநாகரிகமான, வெட்கக்கேடான செயல். தேர்தல் ஆணையத்தில் போலியான கடிதத்தை கொடுத்து அங்கு ஒரு சிலரை கையில் வைத்து கொண்டு பொய் நாடகம் நடத்துகின்றனர். நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வழங்கிய நிலையிலும், கட்சிக்கு சொந்தம் கொண்டாடி அநாகரிகமாக செயல்படுகின்றனர்.
நீதிமன்றத்தின் மூலமாக அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்று கூறிய பின், கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவது கண்டனத்துக்குரியது. கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி இந்த பிரச்னை வெடித்தது. அதில் இருந்து தற்போது வரை ராமதாசை அவமானப்படுத்துவது கொச்சைப்படுத்துவது, வேதனை படுத்துவது போன்ற நிகழ்வு தான் நடந்து வருகிறது. கட்சியை உருவாக்கிய ராமதாஸை கொச்சைப்படுத்துவதால், அவமானப்படுத்துவதால், அன்புமணிக்குதான் தரக்குறைவு ஏற்படும். ராமதாசுக்கு மிகப்பெரிய வலிமை கூடியுள்ளது. இந்த தேர்தலில் ராமதாசின் செல்வாக்கு அதிகரிக்கும், ராமதாஸ் வைக்கும் கூட்டணி தான் ஆட்சியில் அமரும். இதுவரை எந்தக் கட்சியிலிருந்தும் கூட்டணி குறித்து பேச்சு நடத்தவில்லை. இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் இடையே ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
* ‘ராமதாஸ் போக சொன்னால் கண்டிப்பாக நான் போவேன்’
‘ராமதாஸ், அன்புமணி தந்தை- மகன் என்ற இருவரையும் பிரிப்பது ஜி.கே.மணி என்றால் யாராவது நம்புவார்களா? சிரிக்க மாட்டார்களா? சொந்த மகனிடமே பேச வேண்டாம் என்று சொன்னால் எப்படி அவர் கேட்பார். இதை நான் சொல்வேனா அப்படிப்பட்ட மனசாட்சி இல்லாத ஆள் நான் இல்லை. இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான். மணி நீ கட்சியில் இருக்கலாம் என்று ராமதாஸ் சொன்னால் இருப்பேன். இல்லை வேண்டாம் என்று சொன்னால் விலகி விடுவேன். வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டேன். கட்சியை விட்டு போக சொன்னால் கட்டாயம் விலகி விடுவேன். இன்று வரை அவருடைய வார்த்தையை மீறியதில்லை’ என்று ஜி.கே.மணி கூறினார்.
