கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே மாவட்ட பாஜ அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார். தம்பி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாம். இது சினிமா அல்ல. தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். பின்னர், தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை போட வேண்டும். அந்த வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். தவெகவுக்கு அந்த கட்டமைப்பே கிடையாது. தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளது. 10 வேட்பாளர்களின் பெயரை விஜய்யால் சொல்ல முடியுமா?. திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சிகள் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அரசு நிர்வாகம், நீதி நிர்வாகம் சேர்ந்து இருந்தால் தான், ஆட்சி நிர்வாகம் நன்றாக இருக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
* ‘ஓபிஎஸ், டிடிவி எங்கள் கூட்டணியில் இல்லை’
நயினார் கூறுகையில், ‘அதிமுக, பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து, சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல. அது தவறான செய்தி. எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சந்திப்பின் போது, கூட்டணி கட்சிகள் குறித்து விவாதம் மட்டும் நடந்தது. தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு, தேஜ கூட்டணியில் பிற கட்சிகள் இணையும். பொறுத்திருந்து பாருங்கள். தை பிறந்தவுடன் அதற்கு பதில் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர், தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை. ஓபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட கூட்டணியில் மாற்றங்கள் வரலாம். அப்போது தான், ஓபிஎஸ்சின் தேர்தல் கூட்டணி குறித்து தெரியவரும்’ என்றார்.
