தவெகவில் ஓபிஎஸ் இணைப்பா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோபி: தவெகவில் ஓபிஎஸ் இணைகிறாரா? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பரபரப்பு பதில் அளித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தவெக அலுவலத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினத்தை முனிட்டு அவரது உருவப்படத்துக்கு தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 97,37,812 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள், வேறு இடத்திற்கு மாறி சென்றவர்கள், இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.

கோபியில் உள்ள 296 பூத்களில் பணியாற்ற தவெக பொறுப்பாளர்கள் உள்ளனரா? என்ற கேள்விக்கு, பூத்களில் பணியாற்ற உள்ள விவரங்களை 3 நாளில் தயாரித்து விடுவோம் என்றார். ஓபிஎஸ் தவெகவிற்கு வர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘‘ஓபிஎஸ் தரப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தவெகவில் இணைவாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். தவெக தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘‘எதிர்காலத்தில் யார் யார் சேர்வார்கள் என்பது அப்போது தான் தெரியும்’’ என்றார். அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தவெகவிற்கு எப்போது வருவார்கள் என்ற கேள்விக்கு ‘‘மிக விரைவில் வந்துவிடுவார்கள்’’ என்றார்.

Related Stories: