மேட்டுப்பாளையம்: சன்ஷத் கேல் மகோத்சவ் – 2025 எனப்படும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளையாட்டு போட்டிகள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த நவ.21ம் தேதி துவங்கியது. போட்டிகளில் பேட்மிட்டன், கபடி, வாலிபால், கோ-கோ, சிலம்பம், யோகா டர்ப் கிரிக்கெட் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 4500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடந்து முடிந்த போட்டிகளில் 500க்கும் மேற்பட்டோர் மிக சிறப்பான முறையில் விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் விளையாட்டு திருவிழாவின் நிறைவு விழா நேற்று மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு எஸ்எஸ்விஎம் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அந்த வகையில் எஸ்எஸ்விஎம் பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் வீராங்கனை நேசிகா என்பவருடன் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து அந்த வீராங்கனையை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கிராமம் தோறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதும், அவர்களின் திறமையை ஊக்குவிப்பதுமே இந்நிகழ்ச்சியின் நோக்கம். பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடி அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தி பேசினார். கேலோ இந்தியா மூலம் நமது விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே இலக்கு’ என்றார்.
