வருசநாடு, டிச.24: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கப்பட்டது. ஏழு நாட்கள் நடைபெறும் முகாமில் பிளாஸ்டிக் அகற்றுதல், சாலையோரம் மரக்கன்றுகள் நடுதல், போதைப்பொருள் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. முகாமின் தொடக்க நாளான நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் அழகுசிங்கம் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
அதைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமணன்தொழு சாலையோரம் உள்ள மலையடிவாரத்தில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். அங்கு அகற்றப்பட்ட குப்பைகள் அனைத்தையும் சாக்கு மூட்டைகளில் கட்டி பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்தப் பணிகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் செல்வம், முத்துப்பாண்டி மேற்பார்வை செய்தனர்.
