சாண்டா கிளாஸ் பேரணி

மதுரை, டிச. 24: மதுரையில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆராதனைகள், திருப்பலிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோ.புதூரில் உள்ள லூர்தன்னை திருத்தலத்தில் நடந்து வரும் கிறிஸ்துமஸ் விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் முதல் மாணவ, மாணவிகள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணியாக நேற்று சென்றனர். இந்த பேரணியை பங்குதந்தை ஜார்ஜ் தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றார்.

இந்நிகழ்ச்சிக்கு உதவி பங்குத்தந்தையர்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ், குணா ஆகியோர் முன்னிலை வகித்துச்சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பாடல்கள் பாடியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகப்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த பேரணி, அழகர்கோவில் ரோடு மற்றும் மாதா கோவில் மெயின் வீதி வழியாக சென்றது. ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

 

Related Stories: