திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் வழியாக 10 நாட்கள் 90 சதவீதம் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகுண்ட துவாரம் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து நியமிக்கப்பட்ட 3அமைச்சர்கள் கொண்ட துணைக் குழு உறுப்பினர்களான இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் சத்யபிரசாத் ஆகியோர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில், வரும் 30ம் தேதி முதல் ஜனவரி 8ம்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் வைகுண்ட துவார தரிசனங்களில் (சொர்க்கவாசல்) சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். மொத்தம் 10 நாட்களில் 182 மணி நேர தரிசன நேரத்தில், 164 மணி நேரம் சுமார் 90 சதவீதம் இலவச தரிசனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக குலுக்கல் மூலம் இலவச தரிசன டோக்கன்களை பெற்ற அனைத்து பக்தர்களும் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைய வேண்டும். வரிசைகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கப்படுகின்றன.
27 மாநிலங்களைச் சேர்ந்த 23.64 லட்சம் பேர் குலுக்கல் மூலம் தரிசன டோக்கன் பெற்றுள்ளனர். முதல் மூன்று நாட்களுக்கு 1.89 லட்சம் இலவச டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த டோக்கன்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித டோக்கன் இல்லாவிட்டாலும் ஜனவரி 2 முதல் 8ம்தேதி வரை சர்வ தரிசனம் மூலம் சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார், தேவஸ்தான அதிகாரிகளுடன் பக்தர்கள் ஒத்துழைத்து பொறுமையுடன் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டும். பக்தர்கள் முழுமையாக திருப்தி அடையும் வகையில் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* 12 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,764 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,077 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியல்களில் ரூ.4.01 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
