புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த நிலையில் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக, ‘ஜி ராம் ஜி’ எனும் புதிய சட்ட மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
இதற்கு எதிராக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர். இருப்பினும், கூட்டத்தொடர் முடிந்தவுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் சுமூகமாக உரையாடினர். ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இந்த விருந்தை புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இதில் பங்கேற்றது ‘இந்தியா’ கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், ‘வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு முடக்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் தலைவர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்றது துரதிர்ஷ்டவசமானது’ என விமர்சித்திருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி ஜெர்மனி சென்றுள்ள சூழலில், இன்று (டிச. 23) காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், பிரியங்கா காந்தியை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனப் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரியங்கா காந்தியிடம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் துணிச்சல் உள்ளது; வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்கும் வல்லமை அவருக்கு மட்டுமே இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் விவாதம் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் பாஜக அரசை நோக்கி பிரியங்கா காந்தி ஆக்ரோஷமான கேள்விகளை எழுப்பி கவனம் ஈர்த்திருந்தார். நேரு போன்ற தலைவர்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பேசுங்கள் என அவர் ஒன்றிய அரசை சாடியிருந்த நிலையில், தற்போது அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இம்ரான் மசூத் பேசியிருப்பது அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
