பெர்லின்: அனைத்து விசாரணை அமைப்புகளும் பா.ஜ கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய தேர்தல் நடைமுறையில் சிக்கல் உள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஐந்து நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அவர் நேற்று பெர்லின் நகரில் உள்ள ஹெர்ட்டி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கூறியதாவது: இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்த பா.ஜ முயற்சிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிக்க நினைக்கிறது. மொழிகள், மதங்களுக்கு இடையேயான சமத்துவத்தை ஒழிக்க நினைக்கிறது. இந்திய அரசமைப்பின் மையப் புள்ளியை சிதைக்க நினைக்கிறது.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடைபெறும்போது எதிர்க்கட்சிகள், தேர்தலில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று சொல்வதோடு நிறுத்திவிடாமல், அதை எதிர்க்க சில வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அந்தவகையில், ஜனநாயக அமைப்பை தாக்குவோரை நாங்கள் எதிர்கொள்வோம். அதற்காக ஒரு வழியை நாங்கள் உருவாக்குவோம். எதிர்க்கட்சிகளின் இந்த உத்தி நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் பாஜவுக்கு எதிராகப் போராடவில்லை. நாங்கள் இந்தியாவின் கட்டமைப்பை கைப்பற்றும் அவர்களின் போக்கை மட்டுமே எதிர்க்கிறோம்.
அடிப்படையில், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இரண்டாவதாக, அரசு கட்டமைப்பு ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறுகிறோம். அரசு கட்டமைப்புகளை ஆயுதமாக்கும் முயற்சி நடக்கிறது. இதனால், அரசு கட்டமைப்புகள் என்ன மாதிரியான பணிகளைச் செய்ய வேண்டுமோ அவைகளால் அதைச் செய்ய இயலவில்லை. இந்திய ஜனநாயகம் வெறும் இந்தியாவின் சொத்து மட்டுமல்ல; அது உலகின் சொத்து. அதனால் தான், இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், உலக ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என நான் கூறுகிறேன்.
அரியானா, மகாராஷ்டிரா தேர்தல்கள் நியாயமாக நடந்ததாக நான் உணரவில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கியது. அதற்காக அவற்றை தன்னுடைய ஏவலுக்கானது என்று கருதவில்லை. அந்த அமைப்புகள் தேசத்துக்கானவை என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், பாஜ அந்த அமைப்புகளை தனது சொந்த அமைப்புகளாகப் பார்க்கிறது. அதனால் தான் அவற்றைக் கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றது. சிபிஐ, அமலாக்கத் துறை அரசு ஆயுதங்களாகிவிட்டன. அவை குறிவைக்கும் பாஜ மற்றும் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையைக் கொண்டே அதை உறுதிப்படுத்திவிடலாம். இந்த அமைப்புகளின் வழக்குகள் எல்லாமே அரசியல் சாயம் கொண்டவையாக உள்ளன. அதுமட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரத்தை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் சில போட்டிகள் உள்ளன. அது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையைக் காட்டவேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் நாடாளுமன்றத்தில் பார்த்ததுபோல் அதை வெளிப்படுத்துவோம். நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம், பாஜவை ஒற்றுமையுடன் எதிர்ப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
* காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக பிரியங்காவை அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்
பிரியங்கா காந்தியை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என உபி மாநிலம் சகாரன்பூர் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரியங்கா காந்தியிடம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் துணிச்சல் உள்ளது; வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்கும் வல்லமை அவருக்கு மட்டுமே இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
* குடும்பத்தினரும், கட்சியினரும் எதிர்ப்பதால் ராகுல்காந்தி நிலைகுலைந்துள்ளார்: பாஜ
தனது கட்சி தலைவர்களும், குடும்ப உறுப்பினர்களும் கூட ராகுல் மீது நம்பிக்கை காட்டாததால் அவர் நிலைகுலைந்து போயிருப்பதாகவும், அதனால்தான் ராகுல்காந்தி வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிராகப் பேசி, நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் பா.ஜ குற்றம் சாட்டியது. டெல்லி பா.ஜ தலைமை அலுவலகத்தில் பேசிய பா.ஜ தேசிய செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில்,’ ராகுல்காந்தி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரது தலைமையில் காங்கிரஸ் 95 தேர்தல்களில் தோல்வியடைந்ததே இதற்குச் சான்று. ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கையின்மையை எதிர்கொள்கிறார். அவரது இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டாளிகள், அவரது சொந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராக ஒருவர் பின் ஒருவராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள்.
எனவே அவர் மீண்டும் ஒருமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு, அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸுக்கு விசுவாசமாக இருந்து, பாஜ மற்றும் இந்தியாவுக்கு எதிராகத் தனது கோபத்தைக் கொட்டுகிறார். மோடிக்கும் மக்களின் ஆணைக்கும் எதிராக மீண்டும் ஒருமுறை, ராகுல் காந்தி பெர்லினில் இந்தியாவை எதிர்த்து பேசியுள்ளார். ராகுல்காந்தி இந்த அளவுக்கு நிலைகுலைந்து போயிருப்பதற்கு, அவரது கட்சி சகாக்களே அவர் சொல்வதை நிராகரிப்பதுதான் காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் சசி தரூர். அவர் கடந்த 20 ஆண்டுகளில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த பணிகளைப் பாராட்டி, ராகுல்காந்தியின் வாக்குத் திருட்டு என்ற வாதத்தை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்துவிட்டார்.
காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், தனக்கு ராகுல் காந்தி மீது இனி நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகக் கூறி, அவருக்குப் பதிலாக பிரியங்கா காந்தியை கொண்டுவர வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கு பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ராவிடமிருந்து ஒரு ஆதரவு கிடைத்தது. அவர் ‘ஆமாம், அது சரிதான்’ என்று கூறியுள்ளாா். மாா்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை விட்டுவிட்டு ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது வேலையை சீாியசாக எடுத்துக்கொள்வதில்லை என்று அவர்கள் கூறினார்கள். ராகுல்காந்தியின் தலைமையில் காங்கிரஸ் பாரத அவதூறு படையாக மாறிவிட்டது’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
