பாட்னா: அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கமிஷன் பெறுவதாக ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி கூறியிருப்பது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, ஒன்றிய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கோரிக்கைகளை முன்வைப்பதும் வழக்கம். சமீபத்தில்கூட தனது கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட நேரிடும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில், கயாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் செய்வது குறித்தும், ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது குறித்தும் பகிரங்கமாகப் பேசியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ‘நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 சதவீதம் கமிஷன் பெறுவது எழுதப்படாத விதியாக உள்ளது;
நானும் இதுபோலப் பலமுறை சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்று, அதனைத் தனிப்பட்ட முறைக்குப் பயன்படுத்தாமல் கட்சியின் வளர்ச்சிக்காகக் கொடுத்துள்ளேன்’ என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். மேலும், மேடையில் இருந்த தனது மகனும் அமைச்சருமான சந்தோஷ் குமார் சுமன் மற்றும் கட்சி நிர்வாகிகளைப் பார்த்து, ‘கட்சிப் பணிகளுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் பணம் தேவைப்படுவதால், ஒப்பந்ததாரர்களிடம் 10 சதவீதம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
5 சதவீதமாவது கமிஷன் பெற்றுக் கொள்ளுங்கள்; அதில் கார் வாங்கலாம் அல்லது அடுத்த தேர்தலுக்குத் தயாராகலாம்’ என்று வெளிப்படையாக அறிவுரை வழங்கினார். ஆளும் கூட்டணி அமைச்சரே ஊழலை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
