நிதித்துறை இணைஅமைச்சர் பதவி விலகுகிறார் ஒன்றிய அமைச்சரவை மாற்றம்? 10 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: பாஜ கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பீகார் மாநில அமைச்சரான இவர், பெரிய அளவில் பிரபலமில்லாதவர். ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு நிதின் நபின் தான் பாஜவின் புதிய தேசிய தலைவராகவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட அதிரடி மாற்றத்தை ஒன்றிய அமைச்சரவையிலும் மேற்கொள்ள பாஜ தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமராக மோடி கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.

அவருடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் கொண்ட ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இந்த புதிய அரசு அமைந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்களோ அல்லது விரிவாக்கங்களோ நடைபெறவில்லை. கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய இந்த அமைச்சரவையில், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் முக்கியத் துறைகள் மாற்றப்படாமல் அப்படியே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

அதேபோல் ஜே.பி.நட்டா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையையும், நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்துத் துறையையும், சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மைத் துறையையும் கவனித்து வருகின்றனர். ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை அஸ்வினி வைஷ்ணவ் நிர்வகித்து வருகிறார். கடந்த ஆட்சியைப் போலவே முக்கிய இலாகாக்கள் அனைத்தும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களிடமே தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒன்றிய நிதியத்துறை இணையமைச்சராகப் பதவி வகிக்கும் பங்கஜ் சவுத்ரி, கடந்த 14ம் தேதி உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் கொள்கைப்படி, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முறையில் அவர் தனது அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிதியமைச்சகத்தில் ஒரு இடம் காலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு அமைச்சரவை மாற்றத்திற்கான அல்லது விரிவாக்கத்திற்கான முக்கியத் தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும் என்று டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, 543 எம்பிக்களுக்கு அமைச்சரவையில் மொத்தம் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது 72 பேர் மட்டுமே உள்ளனர். பங்கஜ் சவுத்ரியின் எதிர்பார்க்கப்படும் ராஜினாமாவையும் கணக்கில் கொண்டால், சுமார் 10 இடங்கள் வரை காலியாக உள்ளன. எனவே, ஒன்றிய அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பெரிய அளவில் மூத்த தலைவர்கள் மாற்றம் இல்லாவிட்டாலும் 10 அமைச்சரவை இடங்களுக்கு முற்றிலும் அறியப்படாத புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவே பாஜவின் குறிக்கோள் என்பதால் அதற்கேற்ப அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

* மஞ்சி திடீர் போர்க்கொடி
பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், பீகார் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மஞ்சி திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளார். கயாவில் நடந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மஞ்சி, ‘‘2024 மக்களவை தேர்தலின் போது 2 தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக பாஜ தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் ஒரே ஒரு மக்களவை தொகுதி தரப்பட்டது. அதில் வெற்றி பெற்ற எனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகள் கேட்டோம். ஆனால் 6 தொகுதிகள் மட்டுமே தரப்பட்டது.

அதில் 5ல் வெற்றி பெற்றோம். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கண்டிப்பாக ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அவ்வாறு வழங்கப்படாவிட்டால், நான் எனது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்; மேலும் கூட்டணியிலிருந்து வெளியேறி தனிப் பாதையில் செல்லவும் தயங்கமாட்டேன்’’ என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: