*2வது முறையாக குடிநீர் குழாய்களை உடைத்தனர்
நாகர்கோவில் : நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எஸ்.எல்.பி. அரசு தொடக்கப் பள்ளியில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் குடிநீர் குழாய்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவில் பி.டபிள்யூ.டி சாலையில் எஸ்.எல்.பி அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
ங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு மாணவ மாணவியர் உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்த பின்னர் தலைமை ஆசிரியை செலின்ராணி வகுப்பறைகளை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்த ஒரு கும்பல், பள்ளியில் உள்ள மாணவ, மாணவியருக்கான கை கழுவும் இடத்திற்குச் சென்றுள்ளது. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் நல்லிகளை அந்த கும்பல் இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் பைப் லைன்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். கழிவறையையும் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்களும், மாணவர்களும், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கை கழுவும் இடத்தில் குழாய்கள் இல்லாததால், மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் கைகழுவவும், குடிநீர் அருந்தவும் முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
இரவு நேரத்தில் சமூக விரோதிகள் இந்தப் பள்ளியைத் தங்களது கூடாரமாகப் பயன்படுத்தி வருவதும், போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதும் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விடுமுறை நாட்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறியுள்ளது. இந்த பள்ளியில் குடிநீர் நல்லிகளை அடித்து உடைப்பது இது 2வது முறை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த இரும்பினால் செய்யப்பட்ட ஏணி ஒன்றையும் கும்பல் தூக்கி சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
விடுமுறை நாட்களில் இந்த பள்ளி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து அந்த பகுதியில் குடித்துவிட்டு பாட்டில்களையும், மிஞ்சிய உணவு பொட்டலங்களையும் வீசி எறிந்து செல்கின்றனர். காலையில் வந்து துப்புரவு பணியாளர்கள் அதனை சுத்தம் செய்கின்றனர். பள்ளி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதிக்கும் போது இது தொடர்பான தகவல் கோட்டார் காவல் நிலையத்திற்கு தெரிவித்தாலும் போலீசார் கண்டுகொள்வது இல்ைல.
மேலும் ரோந்து பணிகளும் இந்த பகுதியில் நடைபெறுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலகம், வினாத்தாள் பாதுகாப்பு மையம், பல்வேறு கல்வித்துறை அலுவலகங்கள் இந்த வளாகத்தில் உள்ளது.
இருப்பினும் இந்த பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னர் காவல் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பெற்றோர் அச்சம்
அரசு பள்ளிகளில் ஏழை மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசு, தன்னார்வ அமைப்புகள், பள்ளி மேலாண்மை குழுக்கள் ஏற்பாட்டில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்கின்ற உதவிகளையும் ஒரு சில நொடிகளில் இந்த கும்பல் வீணடித்து செல்கிறது.
நகரின் முக்கியப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இத்தகைய நாசவேலைகள் நடப்பது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
