ஓமலூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை முன்பு மாந்திரீக பூஜை

*ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்

ஓமலூர் : ஓமலூர் அருகே அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமாண்டப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜான் போஸ்கோ கென்னடி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, அதில் மஞ்சள், குங்குமம், ஓலைச்சுவடி மற்றும் மரக்கட்டை பொம்மை, முட்டை ஆகியவற்றை வைத்து மாந்திரீக பூஜை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், தலைமை ஆசிரியர் அறையில், மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, பள்ளியில் நடை பயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக்கு மர்ம நபர்கள் சூன்யம் வைத்து விட்டதாக கூறி, மிகுந்த அச்சத்திலும், பயத்திலும் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள், விடிய, விடிய மாந்திரீகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த பூஜை எதற்காக செய்யப்பட்டது?, யாரை அச்சுறுத்த செய்யப்பட்டது.

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கெடுதல் செய்ய இதுபோன்ற மாந்திரீக பூஜை செய்யப்பட்டதா என கண்டறிந்து, இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: