விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

*போலீசார் பேச்சுவார்த்தை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் தமிழக எல்லை பகுதியின் அமைந்துள்ள சொர்ணாவூர் கிராமத்திலிருந்து புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூருக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புதுச்சேரிக்கும், அங்கிருந்து அவர்கள் தமிழக பகுதிக்கும் வந்து செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சாலையை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், சொர்ணாவூர்-கரையாம்புத்தூர் சாலை போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றோம்.

இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது இந்த சாலையை சீரமைக்க கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம். அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சொர்ணாவூர்-பட்டாம்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: